தேடல்

Wednesday 19 September 2012

மழை தேடும் மனிதர்கள் !

மனிதக் கோடாரிகள்
வெட்டி வீழ்த்திய
உயிரற்ற மரச் சடலங்கள்..
நம் வீடுகளில்
நிலைக் கதவுகளாய்
சன்னல்களாய்
தூண்களாய்
நாற்காலிகளாய்
நடவாகி நிற்கிறது...


இன்றாவது
தன் சந்ததியை
நடவு செய்ய மாட்டானா ?
என்ற ஏக்கத்தில்
மனிதனுக்கு
அடிமையாய்
அறம் புரியும்
மர ஆன்மாக்கள்..
மறந்தே போகிறது.!
தன்னைக் கொன்ற
மனித சந்நிதியை.?

ஆதியில்
விறகுக்காக
மரம் வெட்டிய
மனித கரங்கள்..
இன்று
வீம்புக்காகவும்
வெட்டுகிறது...

கானகங்கள்
களவாடப்பட்டதால்,
கார் மேகங்கள்
காணாமல் போனது..
மழை யென்னும்
மகத்துவம் கானல் நீரானது...


பருவ மழை தேடும்
விவசாயி கூட
பருவம் வந்ததும்
அறுவடை செய்கிறான்
பதறுகளை...
பருவ மழை பொய்த்ததால் !

நாகரீகம்
பற்ற வைத்த நெருப்பு
பசுமைகளை பொசுக்கியது..
பசுமை மறைந்ததால்
உயிர்மை விலகியது...

அருகிப் போன
காடுகளில்,
குறுகிப் போனது..
அரிய விலங்குகளின் விலாசங்கள் !

காரிருள் காடுகள்
கட்டாந்தரை ஆகியதால்,
காலாவதி ஆனது..
பறவைகளின் பிறப்பிடங்கள் !


மனிதன்
மரம் கொன்றான் - அதனால்
மழை கொன்றான்..
மனிதம் கொன்றான் - விரைவில்
மரணம் கொண்டான்...

மனிதன் இன்னும்
பணம் திண்ணப்
பழகாததால் - உலகில்
'பணப் பயிர்கள்' மட்டும்
நடவாகிறது - அதனால்
எங்கோ ஒரு சொட்டு
மழையாகிறது !


வறட்சியில்
கிணறுகள்
மழை தேடுகிறது..
தழைகள் கருகிய
தாவரங்கள்
தண்ணீர் தேடுகிறது..
தாகம் கொண்ட
தரணியின் தலையெழுத்து
இங்கு சப்தமில்லாமல் 
செதுக்கப்படுகிறது...
மழை துளிகளால்.!

இறைவன் நாடி,
ஆளுக்கொரு மரம் நட்டால்,
ஆயுளின் வரம் நிச்சயமாகும்..
ஆக்சிஜன் தரும் உத்திரவாதம்...

மரம் நடுவோம்.. மழை பெறுவோம்... 

Tuesday 4 September 2012

சுமை தாங்கியின் சுமைகள்

மங்கிய
பார்வையிலும்,
மழுங்கிய வார்த்தைகளாக..
நலிவை அடைந்து,
வலிமை இழந்து,
பொலிவைத் தொலைத்த..
ஒரு 'முதியவரின் அறைகூவல்'
இங்கு
கண்ணீர் துளிகளால்
நதியாகி நனைக்கிறது.!


காலம் களவாடிய மிச்சம் நான்..
காலன் உறவாடும் எச்சம் நான்...
சொந்தம் விரட்டிய சோதனை நான்..
பந்தம் துரத்தும் பரிதாபம் நான்...

நாடி தளர்ந்த,
வாழ்க்கையின் விளிம்பில்
நாதிகள் இல்லாத சாதியில் நான்...

வாலிப முறுக்கில்,
வாழ்வாதாரம் சேர்த்தேன் உறவுக்கு..
வயோதிக சறுக்கில்
வாழ்க்கை சக்கரம் சேர்த்தது - என்னை தெருவுக்கு.??


மழலையாய்
மார்பில் உதைத்த பிஞ்சுக் கால்கள்
மறுபடியும் உதைக்கிறது..
மரித்துப் போவென்று !

கொஞ்சி விளையாடி
குதூகளித்தப் பாசக் கரங்கள்
காத்து நிற்கிறது..
கொல்லப் போகிறேனென்று !

தவமாய் தவமிருந்து
பெற்றெடுத்த பிள்ளைகள்,
தத்துக் கொடுத்தது..
முதியோர் இல்லத்தில் !
அவர்கள் முடிவாய்
மறந்தே போனது ...
முன் பதிவில் - முதியோர் இல்லம்
தனக்கும் உண்டென்று .!?


சுண்டிப் போன
சரீரத்தின் சுழிவுகளில் - மண்டியிடும்
சோகங்கள் சாபங்களானால்
சரித்திரங்கள் - ஒரு நாள்
சாட்சிகளாகும் !

பெற்றவர்களை
தனிமையின் புழுக்கத்தில்
தவிக்க விட்டு,
கடல் தாண்டும் கணவான்கள்
பசிக்கும் கூட பிச்சையிடவில்லை.??


மகனே
சோறு வேண்டாம்.?
பாசம் தா..
பசித்தாலும் பிழைத்திருப்பேன்.!

முதியோர்
இல்லம் வேண்டாம்.?
இருட்டறையிலாவது
இருக்க ஓரிடம் தா..
இறந்தாலும் இன்பமாயிருப்பேன்..!

பிள்ளைகளோடு
களித்த கடைசி நிமிடங்களால்...

கேள்விக் குறியாய்,
வளைந்து போன - என் கூன் முதுகில்
இன்னும் ஏற்றப்படாத சுமைகள் எத்தனையோ ?

பெற்றோர் கண்ணீர்
துடையா பிள்ளைகள்,
அடையா சொர்க்கம்
அணுவளவும்..

பெற்றோர் பழிச்சொல்
பிள்ளைகளானால்,
அடையும் நரகம்
அனு தினமும்...



பெற்றோர் பேணுவோம்..
சொர்க்கம் காணுவோம்...

Tuesday 24 April 2012

'என் நண்பன்' போல யாரு மச்சான் ?



கவலையில்,
கரையும் கணங்களெல்லாம்..
கண்ணீரை துடைத்து விடும்
காட்டாறு - நட்பு !

மகிழ்ச்சியில்,
மிதக்கும் மணித்துளியிலும்..
மனதை பண்படுத்தும்
மாவீரன் - நண்பன் !



அன்னையின்
தாலாட்டுப் பாடல்கள்..
மெலிதாய் குறைந்து
மழலை மொழிகளில்
'நேத்து வருவேன்.. '
'நாளைக்கு வந்தேன்...' என

இலக்கணப் பிழைகளோடு
தடுமாறிய உதடுகள்..
தாய் மொழியை சரளமாய்
பேசத் துணிந்தது
பால்ய நண்பனிடம் தான் !




யார் ?
என் பாசப் பிணைப்பு...
நினைவலைகளை
பின்னோக்கி நகர்த்திய போது...
இறந்த காலத்திலும்
உயிருடன் பயணிக்கிறான் - என்னுடன்
நண்பன் !



மழையில் நனைவான்..
அவன் பிடித்திருக்கும் குடைக்குள் நான்...
துளியும் நனையாமல் !




வெயிலும் விதி விலக்கல்ல..
அவன் பிடிக்கும் குடைக்குள் நாங்கள்...
நிழலின் தொடரலில் !



சரீரம் துளைக்கும்
குளிர் நடுநிசியிலும்,
கொஞ்சமும் இல்லை.. நடுக்கம் ...
எனக்கு .?


கண் விழித்த பின் தான்
கண்டு கொண்டேன். ?
நண்பன் இட்ட கம்பளி.. என் மேல்...
அருகே நடுங்கிய படி
நண்பன்.. போர்வையின்றி...

என்
தவறுகள்
தலையெடுக்கும் தருணங்கள்..
'கன்னத்தில் அறைந்து'
உண்மையை உணர்த்தும் உரிமை
பிதா, குருவிற்கு பிறகு உனக்கல்லவா ?




நான்
புரியும் தவறுகள்,
உணர்த்தும் தோழன்..
அறியும்
உண்மைகள் பேசும்,
தர்மன்...

நண்பா !
நீ
கேட்காமலே தந்த கடன்களுக்கு,
இது வரை..
கணக்குகள் ஏதும் இல்லை -  என்னிடம்..


இன்னும்
திருப்பித் தராத தொகைகளுக்கு,
இன்று வரை...
வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லை - நம்மிடம்..


மொத்தத்தில்
என் நண்பன் வாழா பூமிப்பந்து..
அன்பைப் புதைத்த  - வெற்றிடம் !

சண்டைகளும்,
சமாதானங்களும்,
முதலாய் கற்றுத் தந்த..
பயிற்சிப் பாசறை - பாசவலை நட்பு !



பலரின்
சாதனை சரித்திரங்களின்,
பின்னணியைத் திரும்பிப் பார்த்தால்...
'ஊக்க மருந்தே' முன்னணியில் வரும்
உருவேற்றியது நண்பனல்லவா ?
ஊக்க மருந்தாக !

நண்பன்
விளையாட மட்டுமல்ல,
விதியின் விளையாட்டு முடியும் வரை !



கருவறை
சுமந்த பிண்டத்தை,
கல்லறை வரை கண்ணீருடன்..
சுமந்து வழியனுப்பும் கட்டுமரம்...
நண்பர்கள் கூட்டம் !

நண்பர்களோடு,
வீதியில் உலா வரும்
மணித்துளிகளின் கம்பீரம்...
காணாமலே போகிறது.?
தனியாய் ஊர் சுற்றும் போது !




பள்ளி
கல்லூரிக் காலங்களில்,
'முதல் முறையாக'
நண்பர்களைத் தொலைத்து - மகிழ்ச்சியை  
கண்ணீரில் தேடுகிறோம் - இன்றும் !
பிரிவதற்கு நிச்சயித்த நாள் முதலாய்
'பேர் வெல்' (FARE WELL)




நான்..
நாடி தளர்ந்து
நூறு வயதானாலும்,
'இளையவனாய்' வாழ முடியும் ...
நண்பர்களோடு நகர்ந்த,
நாழிகைகளை அசை போட்டுக் கொண்டே !

Tuesday 6 March 2012

பாசமுள்ள பவர் கட்




இத்தனை நாளும்
அவசர சிகிச்சைப் பிரிவில்,
அனுமதிக்கப்பட்டிருந்த 'மின்சார ராசா'
இப்போது..
பொது சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம் !



பத்து மணி நேர
பவர் கட் நான்காக குறைப்பு !
இனி
மொத்தமும் குறையுமாம்.?
படிப்படியாக..

இன்னும்
எத்தனை படிகள் ?
என்பது மட்டும்
புரியாத புதிராக...

அறுபதுகளில்
அதிரடியாய் படையெடுத்து,
ஆட்சியைப் பிடித்த
ஐரோப்பாவின் 'மின்சார இளவரசன்'
படுக்கையில் கிடக்க
கிளர்ச்சியின் வேர்கள் அசுர வளர்ச்சியில்...




அரிக்கேன் சமஸ்தானம்..
சிமிழி குறு நில ராசா...
மெழுகுப் போராளி..
தீப்பந்த சாம்ராஜ்யம்...
இன்னும் எத்தனையோ..!




ஐம்பது
வருடங்களுக்குப் பிறகு,
இப்பொழுது தான்
பொழுது சாய்ந்ததன் - கரிய
இருள் புலப்படுகிறது - கண்களுக்கு
மாலை நேர மின் வெட்டால் !




காக்கைகள்
கூட்டமாய் கரைந்து சென்று,
கூடுகளை அடையும் பொழுதுகள்..
நிதர்சனமாய் நிசப்தம் கலைக்கிறது...

இயற்கை காற்று தாலாட்டும்
இருள் சூழ்ந்த கட்டாந்தரை,
இராப்பொழுதுகள்..
இளமை கால தூரிகைகளாக,
இடம் பெயர்கிறது !
இறந்த காலத்தை நோக்கி...





எசமானி
அம்மாவின் தனிக் கவனிப்பில்,
ஈசானி மூலையில் தூசு படிந்து கிடந்த
அம்மிக் கல்லும், ஆட்டுரல் கல்லும்
அடுப்பங்கரையில் அரைக்கும் சத்தம்..

எங்கோ
கேட்டதாய் ஓர் ஞாபகம் !?




அரிக்கேன் விளக்கின்
மண்ணெண்ணெய் வாசனைகள்,
சுவாசத்தில் கரைந்தது காற்றோடு...

எப்போதோ
நுகர்ந்ததாய் ஒரு புரிதல் !?




சில்லென்று
உமிப்புகை போட்ட மண்பானைத் தண்ணீர்..

எங்கேயோ
தாகம் தீர்த்ததாய் ஓர் நினைவு !?

மாதா கோயிலிலும்,
கண்ணீர் அஞ்சலியிலும்,
காணக் கிடைத்த மெழுகுவர்த்திகள்..
இன்று சக்கரவர்த்திகளாக,
இல்லங்கள் தோறும்..!




மின்சாரம்
தடைபடும் நடு நிசியிலும்
சம்சாரமும், குழந்தைகளுமாக,
காற்றைத் தேடிய பயணம்..
கடைசியில் முடிகிறது - குட்டிக் கதைகளோடு

மொட்டை மாடியில்...



வட்ட நிலவும், நட்சத்திரப் போர்வையும்
நிசப்தமான காற்றும் கலந்து...

தொடர் மின்வெட்டால்
தொலைக் காட்சித் தொடர்களின்,
தொடர்ச்சிகள் தொலைக்கப்பட்டது.?

குடும்ப உறவுகளின்
நட்புரையாடல் நாழிகைகள்,
நயமோடு துவங்கப்பட்டது.!




நட்பின்
நாழிகைகள் குறைகிறது - இப்போது..??
மின் வெட்டு குறையக் குறைய ...

மின் வெட்டால்
அமைதிப் பூங்காவான வீடுகள்..
டி.வி ரிமோட்டுக்கான சண்டைகளின்
யுத்தக் களங்களாக மீண்டும் மாறுமோ.?




மின் கட்டண உயர்வை
எதிர் கொள்ள எத்தனிக்கும் வேலையில்,
பாதியாய் குறைந்த மின் கட்டணம்.?
தொடர் மின் வெட்டால்.!

மின் வெட்டால்
இயந்திர வாழ்கையின்
இயக்கங்கள் தடைபட்டு,
இயற்கையின் வாசல்கள் திறக்கப்பட்டது.!

இன்னும்
இயற்கையை சுவாசிக்க மனமில்லை..
மின்சார அடிமைகளுக்கு.?




மின்வெட்டே
நீ என்னைப் பிரிந்தாலும்,
உனக்கு
அஞ்சலி செலுத்தவாவது - சில நிமிடம் 
மின் விளக்கையும்,
விசிறியையும் அணைத்து..
என்னுடன் இருப்பதாய் கனாக் காண்பேன்
பிரிய மனமில்லாமல்...

Sunday 12 February 2012

நான் சுவாசித்த அந்நியக் காற்று

( என் முதல் விமானப் பயணம் குறித்து எழுதியது )

சொந்தங்களைப் பிரிந்து,
சோகங்களை சுமந்தவனாய்..
வருவாய் தேடி - வானத்தை
வலம்  வரப் போகிறேன் .!



விமான நிலையத்தின்
வரம்புகளில் விடுவிக்கப்பட்டு,
விமானமருகில் நான்...




வானத்தை மட்டுமே,
பார்த்துப் பழகிய நானும்..
பறக்கப் போகிறேன்
விமானத்தில்...

ஆசையுடன் அடி எடுத்தேன் !
சன்னலோர இருக்கை
இல்லாததால் சலனம் மனதில்..




சிறு வயது
சேட்டைகளுக்குப் பிறகு,
இருக்கையுடன் இறுக்கிக் கட்டப்பட்டது,
இப்பொழுது தான் !

நான்
சிறகு விரித்த பறவையாய் பறக்க
சில வினாடிகள் மட்டுமே !




உறுமிய இரைச்சலுடன்,
ஓடிய ஆகாயக் கப்பல்..
உயரே பறந்தது
மெல்ல.. மெல்ல...
காதுகளும் அடைப்பட்டது - நேரம்
செல்ல.. செல்ல...
 


காலையில் நீர் தெளித்துப் போட்ட
கோலப் புள்ளிகளாய்,
சென்னை மாநகரம்..!

கட்டுகளில்
இருந்து விடுபட்ட,
கைதியாய் விடுதலையானேன்
தண்டனையிலிருந்து !

வங்கக் கடலைத் துறந்து..
அரபிக் கடலை அடைய...
விரைகிறது விமானம் !





தாய் மண்ணின்,
நினைவலைகளில் கரைகிறது காலம்...

அவசர ஆங்கிலத்தில் ஓர் அறிவிப்பு !
பத்தாயிரம் அடி உயரத்தில்
பறக்கிறதாம் விமானம்..
பதறுகிறது மனம்...




பவனி வரும்
பணிப்பெண்கள்,
பதார்த்தங்கள் பரிமாற்றம்..
பதறிய மனம் - இப்போது
படிப்படியான மாற்றம்...




காற்றை கிழித்து விமானம் செல்ல..
கனாவில் உறைந்தேன் மெல்ல...

அந்நிய மண்
அருகில் நெருங்க, நெருங்க
தாய் மண் - அந்நியமாய் !

ஆண்டுகளாய்,
ஆங்கிலேயனுக்கு அடிமைபட்டது
பற்றாகுறையாய் - கட்டப்பட்டேன்..
அடிமையாக இருக்கையோடு...
மீண்டும் தண்டனை !

உயரத்தில்
உல்லாசமாய் உலவிய
ஆகாயக் கப்பல்,
தரையில் தாவ ஆயத்தமாய்...

சீறிப் பாய்ந்து,
சிரிப்புடன் முத்தமிட்டது..
அந்நியத் தரையை !
இந்திய விமானம்





சில மணி நேர
சிறையிலிருந்து விடுபட்டவனாக
சுதந்திரமாய்  சுவாசித்தேன்
அந்நியக் காற்றை !

Saturday 4 February 2012

ஒப்பாரிகள் ஓராயிரம் - வரதட்சணை கொடுமை !



( மனைவியுடன் இணைந்து எழுதிய கவிதை )

கல்விக்கு
குரு தட்சணை.. அந்தக் காலம்.!
கலவிக்கு
வர தட்சணை .. இந்தக் காலம்.!

பெண்ணடிமைப் பிணியில் - வரதட்சணை
உயிர் கொல்லும் வைரஸ்..!




உடன் பிறந்த சகோதரிகளை
கரையேற்ற, கடல் கடந்து
உழைத்து, உருக்குலைந்து
வளைகுடாவில் வாலிபம் தொலைத்த
'முதிர் கண்ணன்கள்'
இன்றும் தேடித்திரிவது
மன நோயாளிகளாக
தொலைந்த இளமையை..

இருபது சவரன் படையலுக்கு,
அறுபது வயது மாப்பிள்ளை..
அறுபது சவரன் படியளந்தால்
இருபதிலும் மணக்கோலம்...




இங்கு
சவரன்களில் தான் சஞ்சரிக்கிறதோ ?
சத்திய மாங்கல்யங்கள் !

ஆண் மகவைப் பெற்றெடுத்து
அழுது புலம்பியவர் எவருமுண்டா ?
பொற்குவியல் விதைத்த
புன்னகையின் அறுவடைகள்..
கால் நூற்றாண்டாய் காத்திருக்கிறது..?
கணக்குப் போட்டு - விற்பனை முடிக்க !

ஆண் மகன்
கல்லூரி சென்றதால்,
கற்றதும் அதிகம்..
அதனால் பெற்றவர்கள்
கரன்சி நோட்டுகளாக,
பெற்றதும் அதிகம்...





மாட்டுச் சந்தையிலும்,
நடந்திடாத பேரம்..
மணப் பந்தலில்,
அரங்கேறும் அவலம்.!

அலங்கோலமாய் வீடு
அழுகுரல்களின் எதிரொலி
ஓ.. மாப்பிள்ளை வீட்டாரின் விஜயம் !


திருமணம்
முடிந்தும் தீரவில்லை - இன்னும்
தீர்க்கப்படாத
விற்பனை கணக்குகள் !
தற்காலிக தீர்ப்பு..
வாழா வெட்டி !
நிரந்தர தீர்ப்பு...
விவாகரத்து !




மாமியார் கொடுமை
ஒழிக்க களமிறங்கி,
வரதட்சணை வலையில் வீழ்ந்த பரிதாபம்...
கீழக்கரையில் 'வீட்டோடு மாப்பிள்ளை'!

'வரதட்சணை வேண்டாம்'
என்றவனுக்கும் வாயாரவாழ்த்தி வழங்கும்,
உயரிய விருது ..?
'உடலில் ஏதோ கோளாறு' !

இங்கு
திருமணங்கள்..
இலட்சத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறது...
சுவர்க்கத்தில் அல்ல !




பெற்றோரின்
விற்பனை சந்தையில் சிறைபடுகிறது
ஆயுள் கைதியாய் - ஆண் மகனின் வாழ்க்கை..?
வீட்டோடு மாப்பிள்ளையாக !

ஆணடிமைச் சாத்திரங்கள் ஒழியப் பாட
இனியொரு பாரதி பிறப்பானா?