தேடல்

Monday 30 January 2012

எரிதழல் கொண்டு வா !



பசிப்பிணி ஓலங்கள்
ஒலிக்கின்ற தேசம்..
உடலியங்கியும்,
உயிரற்ற சுவாசம் ...
எப்போது தீரும்
இந்த பட்டினிச் சாபம்.?

வறுமையின் வாசல்கள்,
ஏழை நெஞ்சங்களின் நுழைவு வாயில்.!
பசிக் கொடுமையின் கொத்தலங்கள்,
பட்டினிச் சாவுகளின் கூடாரம்..!



மெலிந்த உடலும்,
ஒட்டிய வயிறும்,
குழிந்த கன்னமும்..
நலிவு அச்சின் வார்ப்புகள் !
இழிவு தான் முடிவோ.?



கையேந்தியே
பழக்கப்பட்ட கைகள் ஓரணியாய்,
பண முதலைகள்,
வீடுகளுக்குள் ஊர்வலம்...
சுய மரியாதை ஒழிப்புப் பேரணியாய்.!

பணம் கொளுத்த
பாக்கியவான்கள் வீசும்,
தூண்டில் முட்களில் அகப்படுகிறது..
பாமரனின் அடிமைத்தனம் !



கல்
மனம் படைத்த,
மானங்கெட்ட பாவிகள்
கடத்துவது..
நியாய விலை கடையில்...
ரேஷன் அரிசியை.!




கால்
வயிறு நிறைய,
வழியில்லா அப்பாவிகள்
திருடுவது..
குப்பைத் தொட்டியில்...
எச்சில் இலைகளை..!




மனிதா,
மண்ணுக்குள்
மறையும் முன்
மனிதத்தையாவது விட்டு விட்டு செல்..




நம்
சிறகு முளைக்கும் சிந்தனைகளை,
சிதறடிக்கும் சருகுகளை சேர்த்திடு..
சீரிய எண்ணங்களால் எரிபொருள் ஏற்று !
எரிதழல் கொண்டு வா...



நெருப்பின்
சுவையறியா..
விரல் கொண்ட மழலையும்,
ஒரு நாள்,
எரிதழல் கொண்டு துரத்தும்...
பிணிகளை !

Saturday 21 January 2012

சத்திய போதை !




நாளின் சரி பாதி..
போதை போக மீதி !

நள்ளிரவில்
நிரப்பிய போதை,
நகரும் முன்னே..

அதிகாலையே
அமர்க்களத்துடன்,
அமோக விற்பனையில்..
அதிரடி போதையாய் ஆரம்பம் !




முதல் குவளை,
கம்பீரமாக கரைகிறது..

அது வரை,
உண்மையை உணர்ந்த
உணர்வு தடுமாறுகிறது.!
இரண்டாம் குவளை,
நடுக்கமாக நனைகிறது..

அது வரை,
அறிவோடு அளாவிய
மனிதம் அகலுகிறது.!

மூன்றாம் குவளை,
உளறலாய் உறைகிறது...

இது வரை,
பகுத்தறிவு பேசிய
புனிதம் விடை பெறுகிறது.?




மிருகமாய்
மிரட்டும் முகம்..
அறிவினை
அடகு வைத்த அகம்...

பேசும் வார்த்தைகள்
எல்லாம் மெய்யாக..
வார்த்தை ஜாலங்கள்
எல்லாம் பொய்யாக...




மில்லியில்,
மக்கள் தொகை மில்லியனாய்..
மனிதர்கள் இரட்டையாய்...

பறப்பது பிரம்மையாக..
செலவில்லா விமானப் பயணம் !

குவளைகள்,
நான்கு.. ஐந்து.. ஆறு...
கம்பீரம், நடுக்கம்,
உளறலுடன் உருள்கிறது...




நூறுகளுக்கு
நிரப்பிய அறிவாளி..
கோடிகளை பற்றிய
கனாவில் முட்டாளாய்...

உச்ச போதையிலும்
உண்மையை உணர்ந்தவனாய்,
கண்ணீரோடு சத்தியம் செய்தான்
கடைசி குவளையென்று...
கையில் ஏந்தியவனாய்.!




மீண்டும்.. மீண்டும்..
சத்தியத்தோடு போதை.!
குடி மகனின் கடைசி மூச்சாய்.... 

Sunday 15 January 2012

நியாயத்தைத் தேடி...


புத்தாண்டுகள்
புதிதாய் பிறந்தாலும்,
இன்னும் மாறவில்லை..
கடந்து வந்த பாதைகளின்
அவலச் சுவடுகள்.!

போராட்டங்கள்,
ஆர்பாட்டங்கள்,
உண்ணாவிரதங்கள்,
ஊர்வலங்கள்..  
கடையடைப்புகள்,
மனித சங்கிலிகள்,
பேருந்து மறியல்கள்,
இரயில் மறியல்கள்...



போராட்டங்களின்,
அதிர்வலைகள் மாறும் முன்னே..
மீண்டும் மறக்கடிக்கபடுகிறது.?
மறுபடியும்
புதிய கிளர்ச்சிகள்.!

நியாயத்தின் முழக்கங்கள்
நிர்கதியாய்..
அநியாயத்தின் ஆதரவாளர்கள்
பெரும் திரளாய்..!

உயிர் பயம் காட்டியே,
அணு உலையின் கதவுகள் அடைக்கப்படுகிறது !
கூடங்குளத்தில்..
அணை மதகுகளின் கதவுகள் திறக்கப்படுகிறது !
முல்லை பெரியாரில்...

நூறாண்டு மட்டும்
வாழ்பவனின் கைரேகை,
கணிக்கப்படுகிறது - உனக்கு
அணு உலையால் தான் மரணமென்று !
கூடங்குளத்தில்..


தொள்ளாயிரம் ஆண்டுகள்
வாழ வேண்டியவனின் ஆயுள் ரேகை,
அழிக்கப்படுகிறது - நீ
வாழ்ந்த வாழ்க்கை போதுமென்று !
முல்லை பெரியாரில்...


மரண நண்பன்
கணப் பொழுதும் நம்முடன் தான்,
காலம் கழிக்கிறான்...

கூடங்குளத்திலும்,
முல்லை பெரியாரிலும் அல்ல !



தமிழ் மீனவனின்,
இரத்தம் குடித்தே தாகம் தீர்க்கும்
சிங்கள சாத்தான்கள்  - சர்வ
சுதந்திரமாய் சிறகடிக்கிறது..
மீண்டும் தமிழ் இரத்தம் கேட்டு !


கச்சத் தீவை,
பிச்சை போட்ட நாமும் எடுக்கிறோம்.?
இப்போது இலவசப் பிச்சை!

ஆட்சி கட்டிலில்,
அதிகார வர்க்கம்..
இலவசங்களை பிச்சைஎடுக்கும்
ஏமாளிகளாய் நாம்.! 

மதுவை
மலிவாக்கி மக்களை மயக்கிய, 
அரசாங்கமும்  தள்ளாடுகிறது..
கூட்டணி போதையில் ! 


நூறாயிரம் கோடிகள்
இலாபம் கொழிக்கும் தொழிலாய்... 
கள்ளச் சாராயத்தை
ஒழித்த களிப்பில்,
நாட்டு சரக்குடன் நாம்..!

போராடியே.. பழகியதால்,
புதுப் பொலிவுடன் புத்தாண்டிலும்,
தொடர்கிறது போராட்டங்கள் ..
நியாயத்தைத் தேடி...

Wednesday 11 January 2012

வியர்வையின் வாசனை !



பசுமை மிளிரும் பூமி..
படியுயரும் காலை கதிரவன்..
பறவைகளின் உல்லாச கீதம்...
பனி படர்ந்த புல்வெளி...

மெலிந்த உடலுடன்,
மேலங்கியில்லா மேனியொன்று,
மெல்ல ஊர்கிறது..
மெத்தனம் இல்லாமல்...




மிருதுவான முகம்..
மென்மையான குரல்.!
மருவில்லா பார்வை..
பளீரென்ற பற்கள்.!
பொய் கலக்கா புன்னகை...

கதிரவனை கண்களில் வாங்கி,
களமிறங்குகிறான்..
விவசாயி !

பிறர்
பசியை போக்க,
கலப்பையுடன் களமிறங்கிய,
விவசாயி,
காத்திருக்கிறான்
பசியோடு.!



நாற்று நட்டு,
நம்பிக்கையுடன்..
உழுது, உரமிட்டு,
ஏர் பிடித்து, எற்றமிறைத்து,
வேலியிட்டு, வியர்வை சிந்தி...

களையெடுத்து
கஷ்டங்களுடன்..
கந்து வட்டிக்கு, கடன் வாங்கி,
வித்திட்ட விதைகள் - அரும்பி
தலை தொங்கி, அறுவடை செய்து...

களம் அடித்து, காற்றில் தூற்றி
உமி அடித்து, உறையிலிட்டு..
பண்டக சாலையில் பாதுகாத்து,
பசியுடன் காத்திருக்கும் நேரம்...


அரசாங்க கொள்முதல்
அமோக விலை குறைப்பில்,
அதிரடியாய் அடியெடுக்க.?

தலை தொங்கினான்.?
திக்கு தெரியாமல்..




அவன்
வியர்வையின் வாசனை,
காயும் முன்னே...

Sunday 8 January 2012

ஆலவிருட்சம்

அறிவிலிகளின்,
ஆனந்த தாண்டவம் - சாதிய
வேர்களின் அசுர சூட்சமம் !


 சாதி விதை தூவியவன் - மனதில்
சாந்தி இல்லாமல் சமாதியாகிறான்.?

சாதியை சந்தைபடுத்தியவன்,
விட்டு சென்ற விதைகளின் மிச்சம்
இன்னும் முளைக்கிறது - நம்மில்
அழியாத ரணங்களாய்..?


சிலையினை விதைத்த மனிதன் - தன்
சிந்தனையை விதைக்கத் தான்,
மறந்தே போனான்...

நீயும்,
நானும்,
சகாக்களானால் சாதிகளேது.?

சிந்தித்துப் பார் !
சீக்கிரம் விதை - உன்
சிந்தனை விதைகளை...



அறிவு நீர் ஊற்று - முளை விடும்
நாட்டுப்பற்று.!
சகோதரத்துவத்தை,
உரமாய் ஊட்டு - மனிதம்
மரமாய் எழும்..!

Saturday 7 January 2012

அழிவின் விளிம்பில்...

 பூமித்தாயின்,
கருவறை சுமக்கும்
அக்கினி குஞ்சுகளின் அழுகுரல்கள்..
நாள் குறித்து காத்திருக்கிறது.
நம் அண்டத்தையே புரட்டிப் போட !



கரும் புகை கார்பனின்,
கலவரக் கால்கள்..
ஒசோனையும் ஓட்டையிட்டு,
ஒப்பந்தம் முடித்துள்ளது !
உலக அழிவில் எனக்கும் பங்கென்று...

சுனாமியும்,
சுட்டெரிக்கும் சூரியனும்,
சாட்சி கையெழுத்திட்டு சிரிக்கிறது..?
இயற்கையை  கெடுத்த தலைகளை களையெடுக்க..!


பூமிப்பந்தே,
புதைந்து போனாலும்..
பிரிவில்லா  - இந்த பாலிதீன் புவியெங்கும்
பறந்து கொண்டே தானிருக்கும்...
புற்றீசல் போல.!
பார்க்கும் இடமெல்லாம் பாலிதீன் - நம்மை
சேர்க்கும் இடமெல்லாம் நாம் பாவி தான்..!

மனிதனின்
தடம் படாத அண்டார்டிகாவும்,
பனி உருக்கி, பழி தீர்க்க.. 
கடலுடன் காதல்..?

சாயக் கழிவும்,
சாக்கடை நீரும்,
ஓடும் நதியில், தாவி விளையாடி..
மனிதனைத் தீர்க்க மோதல்..?


மண்ணைக் கெடுத்து,
விண்ணைக் கிழித்து, இயற்கை அன்னையை,
இழிவுப் படுத்திய பாவிகளை - இயற்கை
காவு கொள்ள காலம் தூரமில்லை !

சுற்றமும், சூழலும்
இயற்கையை போர்த்திக் கொள்ளட்டும் !
அழிவென்னும் பனி அகலும் வரை..
பூமித்தாய் உயிருடன் வாழும் வரை...