தேடல்

Saturday 4 February 2012

ஒப்பாரிகள் ஓராயிரம் - வரதட்சணை கொடுமை !



( மனைவியுடன் இணைந்து எழுதிய கவிதை )

கல்விக்கு
குரு தட்சணை.. அந்தக் காலம்.!
கலவிக்கு
வர தட்சணை .. இந்தக் காலம்.!

பெண்ணடிமைப் பிணியில் - வரதட்சணை
உயிர் கொல்லும் வைரஸ்..!




உடன் பிறந்த சகோதரிகளை
கரையேற்ற, கடல் கடந்து
உழைத்து, உருக்குலைந்து
வளைகுடாவில் வாலிபம் தொலைத்த
'முதிர் கண்ணன்கள்'
இன்றும் தேடித்திரிவது
மன நோயாளிகளாக
தொலைந்த இளமையை..

இருபது சவரன் படையலுக்கு,
அறுபது வயது மாப்பிள்ளை..
அறுபது சவரன் படியளந்தால்
இருபதிலும் மணக்கோலம்...




இங்கு
சவரன்களில் தான் சஞ்சரிக்கிறதோ ?
சத்திய மாங்கல்யங்கள் !

ஆண் மகவைப் பெற்றெடுத்து
அழுது புலம்பியவர் எவருமுண்டா ?
பொற்குவியல் விதைத்த
புன்னகையின் அறுவடைகள்..
கால் நூற்றாண்டாய் காத்திருக்கிறது..?
கணக்குப் போட்டு - விற்பனை முடிக்க !

ஆண் மகன்
கல்லூரி சென்றதால்,
கற்றதும் அதிகம்..
அதனால் பெற்றவர்கள்
கரன்சி நோட்டுகளாக,
பெற்றதும் அதிகம்...





மாட்டுச் சந்தையிலும்,
நடந்திடாத பேரம்..
மணப் பந்தலில்,
அரங்கேறும் அவலம்.!

அலங்கோலமாய் வீடு
அழுகுரல்களின் எதிரொலி
ஓ.. மாப்பிள்ளை வீட்டாரின் விஜயம் !


திருமணம்
முடிந்தும் தீரவில்லை - இன்னும்
தீர்க்கப்படாத
விற்பனை கணக்குகள் !
தற்காலிக தீர்ப்பு..
வாழா வெட்டி !
நிரந்தர தீர்ப்பு...
விவாகரத்து !




மாமியார் கொடுமை
ஒழிக்க களமிறங்கி,
வரதட்சணை வலையில் வீழ்ந்த பரிதாபம்...
கீழக்கரையில் 'வீட்டோடு மாப்பிள்ளை'!

'வரதட்சணை வேண்டாம்'
என்றவனுக்கும் வாயாரவாழ்த்தி வழங்கும்,
உயரிய விருது ..?
'உடலில் ஏதோ கோளாறு' !

இங்கு
திருமணங்கள்..
இலட்சத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறது...
சுவர்க்கத்தில் அல்ல !




பெற்றோரின்
விற்பனை சந்தையில் சிறைபடுகிறது
ஆயுள் கைதியாய் - ஆண் மகனின் வாழ்க்கை..?
வீட்டோடு மாப்பிள்ளையாக !

ஆணடிமைச் சாத்திரங்கள் ஒழியப் பாட
இனியொரு பாரதி பிறப்பானா?

1 comment:

  1. varadatchanai kodumai innum maraiyavillai enbadarku nam voordan satchi.thangaludaya inda kavidai anaivarukum oru vilipunarvaha irukatum.

    ReplyDelete