தேடல்

Wednesday 28 December 2011

அர்த்தமுள்ள காதல்

பதினாறு வயதின்
பருவ முறுக்கில்,
படையெடுத்த தேடல்...

காதலின் முதல் உதயம் !
காணும் அழகியெல்லாம்,
காதலியாய்...

'பொறுக்கி' எடுக்கையில்
அழகான பெண்
இவள் தான்..

துக்கத்துடன்
தூக்கம் கெட்டு - புது
திட்டத்துடன், அவள் முன்னே..
தயார் நிலையில் ராணுவமாய்...

அரை குறையாய்,
காதலை சொல்லித் திரும்பி பார்க்க,
வயது இருபது.!


மாணவன் எனும்
மதிப்பை இழந்து, மாதங்கள்
சில சென்ற போது..
என்னவள் முகம்
என்னை கடந்து,
எண்ணங்கள் முழு மதியாய்...

காதலின் நினைப்பில்,
காலம் நகர்த்தும்
கதாநாயகனாய் நான் !
ஓ... காதலே !
நீ என்ன இனிப்பான விஷமா?
காளையாய் எழுந்தவனை
கோழையாக்கி விட்டாயே...

காலங்கள்
கடந்த போது,
கை பிடித்தால் - காதலி
அவள் முறை மாப்பிள்ளையோடு...

 ஐயகோ...
வருடங்களாய் - இதயத்தில்
வாழ்ந்து வந்த காதலி
வேலி தாண்டிய போது
வயது இருபத்தைந்து...

வாழ வேண்டிய வயதில்,
வாழ்க்கை சூன்யமாய்...
 
பெண் தேடுவதை
பெற்றவர்கள் கையில் கொடு..
படிக்கும் வயதில்
காதலிப்பதை விடு...
மண முடித்த பின் - காதலி
மனைவியை ..
காதல் அர்த்தமுள்ளதாகும் !

Tuesday 27 December 2011

பண நோய்க் கிருமிகள்

எலிக்கு பயந்தோடி,
புலியிடம் சிக்கிய கதை..
வெள்ளையர்களை விரட்டி விட்டு,
ஊழல் கொள்ளையர்களிடம் சிக்கி வதை..!


லஞ்சமில்லா கீழக்கரையை உருவாக்குவோம்
லஞ்சமும், ஊழலும்,
தேசத்தை நசுக்கிடும் தீவினைகள்..
பஞ்சமும், பட்டினிச் சாவுகளும்,
பாரத பூமியின் ஊழ்வினைகள் ...


தேகப் பிணி நீக்கிய,
மருத்துவருக்கும் மாரடைப்பு.!
காலாவதி மருந்துகள் களத்தில்,
பிணம் தின்னும் நாய்கள்..?

ஊழல் பிணி தொற்றிய,
'இராச' நரிகளும் ஊளையிடுகிறது..
தின்ற தீனி போதாதென்று...

லஞ்சப் பிணி இல்லாத தலைகளுக்கு,
இங்கு பஞ்சம் !
பிச்சை எடுப்பது.. நாகரீகம்.?
ஆம்... கவுரவ பிச்சை..!

திரும்பிய திசைகளெல்லாம்,
நாய்களும்,
நரிகளும்,
கவுரவ பிச்சைக்காரர்களும்...


கைது செய்யப்பட்ட கவுரவ பிச்சைகாரர்கள்

உழவனுக்கு ஆண்டில்,
ஒரு நாள் அறுவடை..
உனக்கோ,
ஆண்டு முழுதும் அறுவடை..!

ஊழல்
சுனாமியில் சிக்கிய,
தேசமெனும் கப்பல் தத்தளிக்கிறது ..
கனவுகளை மட்டும் நங்கூரமிட்டு ...
ஊழலுக்கான நோபல் பரிசு,
உலக அரங்கில் போட்டியின்றி தேர்வு..
உலக மகா தலை குனிவு..?

காகித பணத்திற்காய்,
தன்மானங்கள் விற்று,
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது !

உள்ளத்தை சிறையிடும்,
'கேவல மிருகமே..
நீ நிச்சயம்
உணர்ந்திடாத வரை,
ஊழல் ஒழிந்திடாது..!

Saturday 24 December 2011

மார்கழிப் பகைவர்கள்


காலம்
களவாடிய மிச்சங்கள்,
கைத்தடியை மறந்து விட்டு
கடுங்குளிர் பகைவனை விரட்ட,
கம்பளிக்குள் தலை மறைவு...
எதிரியை எதிர் கொள்ள  - புதிய
இராஜ தந்திர யுக்தி !?

அதிகாலை
டீக்கடை பெஞ்சுகள்,
தடை உத்தரவை தளர்த்த,
கதிரவனை துணைக்கு அழைக்கிறது..?

பொழுது விடிந்தும்
போனியாகவில்லை...
போண்டாக்களுக்கு ஆயுசு கெட்டி !

மழலை மொழியின்
சில்லறை சிணுங்கல்கள்,
பனியின் துணிவால்..
தவணை முறையில்,
அழுகையால் எதிர்க்கிறது..
நானும் உன் பகைவன் என்று...

நலம் குன்றிய
நபர்கள் மீது தீண்டாமை வழக்குகள் ??
தண்ணீரை ஒதுக்கி தள்ளியதால்....
இவர்களுக்கு,
சுடு தண்ணீர் மட்டும் தான் உயர் சாதி !

இலட்சங்கள்
கொன்று மார்பிள் தரை போட்ட,
இலட்சியவாதிகளை பழித்தீர்க்க..
மிகச் சரியான தருணம்.?
மார்கழிப் பனி தரை இறங்கி திட்டம்..!

கடற்கரை காற்றை
சுவாசிக்க சுதந்திரம் இல்லாமல்,
வீட்டு சிறையில் விசாரணை கைதியாய்..
கடற்கரைவாசிகள்...!

கனல் கக்கிய சித்திரையில்..
வியர்வையின் சித்திரை வதையில்,
மார்கழி கட்சியின் ஆட்சியை கேட்டோம்..
சித்திரை பகைவனானான்..

இப்போது,
ஆட்சி கட்டிலில் அரியணையேறிய,
மார்கழியின் கொடுங்கோலாட்சி கவிழ்க்க..
முதல் எதிரி சித்திரையை கேட்கிறோம்.?
மார்கழிப் பகைவர்கள் ஒன்று கூடி...

நண்பனும்,
சில நாள் பகைவனாகிறான்..
பகைவனும்,
ஒரு நாள் நண்பனாகிறான்...

அப்படியே..
வாழப் பழகி விட்டோம்..
வாழ்க்கை பழகி விட்டது...






Monday 19 December 2011

ஓடிப் போகுமா... கலாச்சாரம் ??

ஒரு தாயின்
கதறல்களும்,
கண்ணீர் சிதறல்களும்,
இங்கே பதிவாகிறது ...
சோக கீதங்களை - தன்
மார்பில் சுமந்து கொண்டு....


மாதம் பத்தையும்,
பத்திரமாய் வழியனுப்பி விட்டு,
மறு பிறவி எடுத்தேனே...
வழியனுப்பிய துக்கத்தில் - உன்
பிறவி எடுக்க...


நீ
மழலையாய்
மடி தவழ்ந்த காலங்கள்  - நான்
துயில் துறந்தேன்...
துதி பாடி, தூங்க வைத்தேன்.
அமுதூட்டி !


நீ
மங்கையாய்
படி தாண்டிய கணங்கள் - நான்
மீண்டும் துயில் துறக்கிறேன். - இப்போது
துயில் பாடுவது, நகர் மக்கள்
நஞ்சூட்டி ..!


அன்று,
புது பிறவியாய் - நான்
கண் விழித்து கலங்கியது - உன்
முகத்தில் தான்...


இன்று,
உன் முகம் விழிக்க - என்
கண்கள் மறுக்கிறது
வழியும் கண்ணீரால்...


நீ
கல்வியும் கற்றாய்,
இலவச இணைப்பாய்,
காதலையும் கற்றாய் - அதில் ஏன்
நம் கண்ணியத்தை விற்றாய்...?


காதலில் விழுந்தது.... நீ
காயங்கள் எனக்கா..?


நான்
உன்னை ஈன்ற பொழுதின்
மறு பிறவி...
ஒரு முறை தான்...
நீ
என்னை செயலால், கொன்ற பொழுதின்
ஈனப்பிறவி
எத்தனை முறையோ !


உன்னால்
சிதைந்த பாரம்பரியம்,
தலைமுறையின் அவமானம் ?


தவறுகள்
என் பக்கமும் தான்..
ஆம்....


நான்
மறந்தது .
உனக்கு அமுதூட்ட அல்ல..
நம்
கலாச்சார சித்தாந்தங்களை ஊட்ட...


கை கொட்டி சிரிக்கிறது
நம் கலாச்சாரம் !
ஓரமாய் நின்று.... 
"ஓடியது நான் அல்ல" என்று...


"வேடிக்கை
பார்த்தது போதும் - தாயே.....
அமுதோடு ஊட்டுங்கள்
என்னையும் சேர்த்து...."


உங்கள்
பாரம்பரியம் பாதுகாக்கப்படும்
கண்ணியம் காக்கப்படும்..
கலாச்சாரம் அழைப்பு விடுக்கிறது !


ஓடிப்போகுமா ... கலாச்சாரம் ?