தேடல்

Thursday 3 October 2013

தாயை கவனி


கருவறை இருட்டின்
நிலவறையில் மீண்டு
நிலவு காட்டிய தாய்
தீட்டானால் இன்று...

படுக்க முடியாமல் புரண்டு
பல இரவு உறக்கம் தொலைத்து
பல ருசியும் உணவும் தவிர்த்து
குனிந்து பொருள் எடுக்க
முனையும் முன்னே
குடம் போல் வயிறும் தடுக்க
உதடு கடித்து வலி பொருத்து
குழந்தை ஈன்றவள்
குடும்பத்தால் ஒதுக்கப்பட்டாள் இன்று...

பொன்னும் வைரமும் சொற்
பொருளில் பொதியா
மின்னும் பவளமும்
மிகுதியாய் முத்தும்
தந்தாலும் ஈடாக
தாயின் கருணை
முதியோர் இல்லத்தின் மூலையில் இன்று...

ஆயிரம் செய்யுள் உண்டு
ஆன்றோரின் வாக்கும் உண்டு
பாயிரம் புனைந்து நல்
பாடலில் பதிய வைத்தும்
கோயிலாய் ஒரு மதமும் தாய்
கொண்ட காலடி சொர்க்கம் என்றும் நல்
வாயிலால் நவின்று நின்றும்
தாய் தெருவில் நிற்கிறாள்
நாதியற்று இன்று....

உண்ணும் பருக்கையும்
உடுத்தும் உடுக்கையும்
மின்னும் உன் பொருளெல்லாம் உன்
தாயின் வரமன்றோ? மூடா!

கரு இருட்டறையில் இருந்து
ஈன்றவளுக்கு உன்
வீட்டின் இருட்டறையிலாவது
இடங்கொடு
இரந்தும் அவளுக்கு புகல் கொடு
இல்லையெனில் - தாய்
இறக்கும் முன் நீ
இறந்து விடு..!


ஆக்கம் : கவிஞர். நசீர் சுல்தான் 

Saturday 1 June 2013

சந்ததி வாழ 'சாதியை சாகடி'..!

ஆதியில்
ஆண் சாதி
பெண் சாதியென்று
பகுத்தாய்வு செய்யத் துவங்கிய
ஆதாமின் வாரிசுகள்...

மனித சாதியில்
மனித மிருகங்களையும்,
மிருக சாதியில்
மிருக மானிடர்களையும்,
சாதிப் பட்டியலாக்கிக் கொண்டனர்..!


ஆரிய மேதாவிகள்
வளர்த்தெடுத்த சாதீய நெருப்பு
குலத்தொழில் பிரிவுகளாகி
கொழுந்து விட்டு எரிகிறது...!

இங்கு
சாதிக் களிமண்ணில் வார்த்தெடுத்த
'தலையாட்டி பொம்மைகள்'
அத்தனையும்
காவல் தெய்வங்களாய்
காட்சி தரும்
சாதீயத் தலைகளின் கட்டளைகளை
தெய்வ வாக்காக பூசிக்கிறது...!


"இல்லங்களை தரைமட்டமாக்கு
அரசுப் பேருந்துகளை தீக்கிரையாக்கு
மரங்களை வெட்டித் தள்ளு
மாறு கால்; மாறு கை வாங்கு
அரிவாளால் வெட்டி கூறாக்கு
கற்பைச் சூறையாடு
உயிரோடு கொளுத்து"

ஐயா,
இதுவா தெய்வ வாக்கு ??

சாதியின் பெயரால்
சாகசங்கள் செய்து காட்டும்
சர்க்கஸ் வித்தைக்காரர்கள்
ஆட்டுவிக்கும் விகடகவிகளாக
அப்பாவிகளின் சாம்ராஜ்ஜியம்..!

'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று
பள்ளி கல்வி ஏடுகள் தோறும்
பாடங்களாக்கி விட்டு...
'சாதிச் சான்றிதழ்' பெறுவதை
சட்டமாக்கிய பரிகாசத்தை என்ன சொல்ல..?



சாதிக்கு சமாதி கட்ட
சொற்போர் புரிந்த வீரத் தலைவர்கள்
இப்போது
அனேகமாக அனைத்து ஊரகங்களின்
ஒதுக்குப் புறங்களிலும்
அண்ணா நகராகவும்
அம்பேத்கார் நகராகவும்
பெரியார் நகராகவும்
பாரதி நகராகவும் 'தன்னந்தனியாக'
சமாதி ஆக்கப்பட்டுள்ளனர்...
'சமத்துவபுரங்கள்' எனும்
சாதியின் அழியாச் சின்னங்களாக...!

சாதிக்கு இலக்கணம்
சொல்லும் சாணக்கியர்கள்
மனித நேயம் கொன்று
விளைந்த சாதி வெறியில்
என்ன சாதனையை இன்னும்
தேடிக் கொண்டிருக்கிறார்கள்..?


சாதியெனும்
சாக்கடைக்குள் நாறிக் கிடக்கும்
சத்தியவான்கள் பேசித் திரியும்
சமத்துவங்கள் 'சாதி'த்தது என்ன...?

சாதிப் பேய் தலைக்கேறிய
சதிகார அதிகாரமே...
சாதீ நெருப்புக்கு தூபம் போட்டு
குளிர் காயும் குள்ள நரி கூட்டமே....

கணக்கற்ற சாதிகளால்
கனக்கும் தேசத்தில்
பிணங்களின் அறுவடை தான்
வசந்த காலமா..??

சரீரத்தில் ஓடும்
உதிரம் என்ன சாதி..?
சாதி வன்முறையால் உதிரும்
உயிர்களுக்கு என்ன நீதி...?

சாமானியர்களை
சண்டாளர்களாக சித்தரிக்கும்
மனு நீதிகள் மூச்சிழக்கும் வரை
சாதிச் சனியன்கள்
சாகப் போவதில்லை...!?

இங்கு
சாதி விதை தூவியவர்கள் மனதில்
சாந்தி இல்லாமல் சமாதியாகிறார்கள்...
சாதியினை விதைத்த மனிதன் - தன்
சிந்தனையை விதைக்கத் தான்
மறந்தே போனான்...!?


நீயும்,
நானும்
சகாக்களானால் சாதிகளேது...?
சிந்தித்துப் பார்
சீக்கிரம் விதை - உன்
சிந்தனை விதைகளை....

அறிவு நீர் ஊற்று
முளை விடும் நாட்டுப் பற்று...
சகோதரத்துவத்தை உரமாய் ஊட்டு
மனிதம் மரமாய் எழும்..!

சாதிகளை பார்த்தால் அழித்து ஒழி..
சாதியை கேட்டால் சவுக்கால் அடி...
சந்ததி வாழ 'சாதியை சாகடி'..!

FACE BOOK COMMENTS :

Unlike ·  · Share

Wednesday 15 May 2013

புத்தகங்களை கொண்டாடுவோம்..!

மரத்துப் போன
வாழ்க்கை நெடுகிலும்
மறந்து போன
வாழும் சித்தாந்தங்கள்
புதைந்து கிடக்கும்
புண்ணிய பூமி
புத்தகங்கள்...

மறை பொருளாய்
அமிழ்ந்து கிடக்கும்
அறிவுப் புதையல்களின்
வெளிச்சக் கீற்றுகள்
வெளியேறும் தலை வாசல்
எழுத்துக்கள்....


தனிமையும் தவிப்பும்
தானாகவே மறையும்
தருணங்கள் யாவும்
உறவாடிய 'சொந்தம்'
புத்தகம் தானே....

அறிவைத்
தேடிய பயணத்தில்
ஆசானாய் போதிக்கும் புத்தகங்களின்
ஆழத்தில் 'கல்வி' எனும்
அறிவூற்று கருவாகி நிற்கிறது...

போட்டிகள் நிறைந்த
புதுமை உலகில்
புத்தக அறிவில் செதுக்கிய
மந்திரக் கோலின் கையசைப்புக்கே
'சிவப்புக் கம்பளம்' விரிகிறது...

வாழ்க்கையில்
பிரதிபலிக்காத வாசிப்புகள்...
காற்றோடு கலந்து
காணாமலே போகிறது.!

புரிதலோடு புறப்படும்
புத்தக மையல்கள் தான்...
புயலாய் மாறி
புளாங்கிதம் கொள்கிறது..!

மனித வாழ்வின்
மகத்துவமான
மணித் துளிகள்
அத்தனையிலும்
மண்டிக் கிடக்கிறது...
வண்டிக் கணக்கில்
புத்தக வாசனைகள்....

பால்ய வயதிலும்
பதின்ம வயதிலும்
கணக்கும் சுமைகளாய்
புத்தகப் பொதிகளை
சுமக்கும் புத்திரர்களுக்கு...
தள்ளாத வயதிலும்
அறிவுச் சுமையால்
வாழ்க்கை மணக்கிறது....

தொட்டுத் தழுவி
கைகளில் தவழும்
நூல்களின் ஸ்பரிசங்கள்
நிலை குத்தி நிற்கிறது...
நூலாயிரம் தந்த சான்றோர்களை
நெஞ்சில் ஏந்தியவாறு....
கணினியுகத்தின்
இணைய புத்தகங்கள்
தந்திடாத மாட்சிமை தாங்கி..!

புலம் பெயர்ந்த பேய்களும்
குடியேறி வசிக்கும் 'மியூசியங்களாக'
இடம் மாறிய நூலகங்கள்...
தலைமுறையின் சாபக் கேடு.!


கரையான்கள் ருசி பார்க்கும்
புத்தக குருத்துகளில் எல்லாம்
ஒளிந்திருக்கிறது....
ஆத்மார்த்த கருத்துக்கள்.!


ஆறறிவு மனிதனின்
அறிவிழந்த அலட்சியத்தால்
சிலந்திக் கூடுகளின்
தாத்ரூப வலைப் பின்னலில்
புத்தகங்கள் பின்னப்பட்டிருக்கிறது
பகுத்தறிவு பாலமாக....


அவசர உலகில்
அறிவை சுவாசிக்க
அனுமதி கிடைத்தாலும் கூட
இன்னும் வாசிக்கப்படாத
புத்தகங்கள் எத்தனையோ..??

புலரும்
பொழுதுகள் எல்லாம்
பண்டிகை தான்...
புத்தகங்களோடு
புரளும் மனிதர்களுக்கு..!

திரும்பிய
திசைகள் எல்லாம்
திருவிழா தான்....
தலைமுறை வாழ்த்தும்
புத்தகப் புனிதர்களுக்கு...!

மகிழ்ச்சித்
தருணங்களில் எல்லாம்
பரிமாறப் படவேண்டியது...
மனம் மகிழும்
வார்த்தைகளோடு....
குணம் தவழும்
புத்தகங்களும் தான்..!

ஊதுவர்த்தி,
சாம்பிராணி வாசனைகளோடு
பூஜைப் பொருளாகும்
புத்தகங்களால் பயனேதுமில்லை
புரிதலோடு புரட்டப்படாத வரை..!

மனிதன்
கொண்டாட வேண்டியது
விழாக்களும் ,
பண்டிகைகளும் மட்டுமல்ல....
புத்தகங்களையும் தான்.


FACE BOOK COMMENTS :

Unlike ·  · Share

Friday 26 April 2013

அசிங்கங்களின் 'முதல் அத்தியாயம்'...

எனதருமை ஆண் வர்க்கமே
எத்தருணமும் நீங்கள்
தலை குனியத் தயாராயிருங்கள்..??

இச்சைகளை தூண்டி,
கொச்சைகளை அழைப்பிடும்
'அசிங்க' மங்கைகளின் அணிவகுப்பு
நகர் வலம் வரும் போதெல்லாம்....


இது
ஆண்களின் தலை குனிவல்ல...
அகிலத்தின் தலை குனிவு..!

'மார்டன்' உலகில்
மார்பை மறைக்கும்
மாராப்புகள் மறைந்தே போனது...
தலையை மூடும் துப்பட்டாக்கள்
கைக் குட்டையாய் குறைந்தே போனது....

மேலை கலாச்சாரத்தை
நகலெடுக்கும் 'நாகரிக மங்கைகள்'...
சீரழிந்த சமுதாயத்தில்
'சாத்தானின் தங்கைகள்'....

உருப்படாத உடுப்புகளை சுமந்து
சந்தியில் தெரியும் சல்லாபங்கள்...
சந்ததியின் சாபக் கேடு..!

காம போதையேற்றும்
கிளுகிலுப்பு ஆடைகள்...
கற்பழிப்புக் கொலைகளை
கடந்து வரும் காம ஓடைகள்....

'உடை' எனும்
பயன்பாட்டை தவறாக
அகராதி கொண்ட 'தங்க மங்கைகள்'
வீதிகளில் வெட்கத்தை
'உடை'த்து ஆண் மகனின் வேதனையில்
சாதனை புரிவது தான் அழகியலா..?

ஆடை சிக்கனத்தால்
அழிந்து போன
'அச்சம், மடம், நாணங்கள்'
கற்பிக்கப்படுகிறது.!?
ஆரம்பக் கல்வியாக....
வகுப்பறை பாடங்களில்..!
இது தான் ஆடை சுதந்திரமா..?

வன்புணர் களையை ஆடையில்
வித்திட்ட வன்முறையே...
வல்லுறவு விதையை அலங்காரமாய்
விதைத்திட்ட தலை முறையே....

காம இச்சைக்கு தூபம் போடும்
காட்சிப் பொருளாய் காணக் கிடைக்கும்
அங்கங்களின் அவயங்கள்...
அசிங்கங்களின் அவலங்கள்....

தெருவெங்கும்
காமக் காட்சிகள் காட்டும்
ஆபாச சுவரொட்டிகளை எல்லாம்
சாயம் பூசி மறைக்கும்
'பெண்ணுரிமை பாசறைகள்'
இங்கு சாயம் போகிறது...?
அரை குறை ஆடைகளை
தூக்கிப் பிடித்தவாறு...!

பெண்ணே...
'ஆடையில் கவனம் தேவை'
அடக்குமுறை சொல்லாய் போனது...
'ஆபாசமாய் ஆடையுடுத்தி உலவு'
விடுதலை வார்த்தையாய் போனது....

பெண்ணே...
நீ
ஆபாசத்தை
அரை குறை ஆடைகளில்
கட்டம் போட்டு காட்டி விட்டு
சட்டம் மட்டும் பேசும்
சம்பிரதாயத்தை எங்கு கற்றாய்..?

மறைப்பதை விடுத்து
திறப்பதை சுதந்திரமாக்கிய
தீமைகளின் வேர்கள்
தொட்டுத் தொடர்கிறது....
நரகத்தின் வாசல் வரை..!

'ஃபேஷன்' என்ற பெயரில்
கிழிக்கப்படும் ஜீன்ஸுகளும்
குறைக்கப்படும் பாவாடைகளும்
உள்ளாடை தெரியும் உடுப்புகளும்
சன்னல் வைத்த சாக்கெட்டும்
பின்னல் குறைந்த மாராப்பும்
தலை விலகிய தாவணியும்
தலை விதியை நிர்ணயிக்கும்..?
வாடகைத் 'தாயின் வாரிசுகள்'....!

நாகரிக மங்கைகளின்
'சிக்'கென்ற உடைகளில்
சிக்கிப் புடைக்கும் சதைத் துண்டுகள்..
சீக்கிரமாய் விதைக்கத் தானே செய்கிறது...
சல்லாபங்களை..!

ஆடைகளால்
மூடப்பட வேண்டிய
தொப்புள் குழிகள்
நிரப்பப்படுகிறது....
காமக் குமிழிகளால்..!

கார்ப்பரேட் விபச்சாரத்தை
கட்டவிழ்த்து விட்ட
சீரழிந்த ஆடைகளின் 'சினேகிதிகள்'
அனுதினமும் பற்ற வைக்கும்
காம வெறியின் நெருப்பு ஜுவாலைகள்
பேரிளம் பெண்களை பொசுக்காத போது.....
பல நேரம்...
பள்ளிச் சிறுமிகளையும்..,,,
சில நேரம்....
பாடைக் கிழவிகளையும்..,,,
கட்டுக்கடங்கா காமம் சுட்டெரிக்கிறது..!!

பெண்களின்
அசிங்க ஆடைகளின் சுதந்திரத்தால்
ஆண்களின்
பார்வை சுதந்திரம் பறி போனது....

இங்கு
கலாச்சார ஆடைகள்
கலையப்பட்டதால்
கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டது..??
கலியுக நவ நாகரீகம்..!

ஒழுக்க நெறி
கற்பு நெறி
பெண் சுதந்திரம் பேசும்
பத்திரிகைகளின் பக்கங்கள் தோறும்
பளிச்சிடுகிறது...
பெண்களின் மார்பும், இடுப்பும்
தொடையும், தொப்புளும்....

ஊடகங்களின்
கவர்ச்சி திணிப்புகளால்
கருவூட்டப்பட்ட காமுகக் கூட்டம்
பசியாறும் 'பாலியல் பண்டமாய்'
பெண்ணினம் பரிமாறப்படுகிறது....

பெண்ணே
நீ
சேலைகளில் காட்டும்
'இறக்கத்தால்' கிறங்கும்
காம மனங்களில்
'இரக்கத்தை' நோக்குவது
சாத்தியமா..?

இயன்றால்
சேலைகள் கட்டுவதில்
கண்ணியம் படி...
தூரப் போட்ட
துப்பட்டாக்களைத்
தேடிப் பிடி...

ஒழுக்கம் பேணி
உடுத்தாத உடுப்பு...
உடலீர்ப்பின் காமங்கள்
கொப்பளிக்கும்
உலகின் அருவெறுப்பு....

பெண்ணே...
உன்
உள்ளத்தின் கண்ணியம்
உடைகளில் தெரியட்டும்..!

கால் நூற்றாண்டுகளாய்
காணாமல் போன
கண்ணிய ஆடைகளின்
'கலை மகள்' இனி....
எப்போது காணக் கிடைப்பாள்..??
காத்திருப்பு தொடர்கிறது....

FACE BOOK COMMENTS :

  • Nazir Sultan இளையவனின் முதிர்ந்த
    செறிவில் முளைத்த 
    முதன்மை கவிதை 

    காலத்தை 

    முறையற்ற 
    காமத்தை 
    காட்டும் 
    நாகரிக கண்ணாடி 

    ஆடை குறைப்பு குறைந்து 
    முழு ஆடை இழக்கும் 
    முன்காலம் 
    முந்திவிடுமோ 
    அச்சமும் 
    அக்கறையும்
    கவிதைகளில் காண்கிறேன் 

    தொடரட்டும் உம்
    கவி மூலம் இப்
    புவி காணும் சேவை 
    வாயார வாழ்த்துக்கள் தம்பி!


Unlike ·  · Share