தேடல்

Wednesday 15 May 2013

புத்தகங்களை கொண்டாடுவோம்..!

மரத்துப் போன
வாழ்க்கை நெடுகிலும்
மறந்து போன
வாழும் சித்தாந்தங்கள்
புதைந்து கிடக்கும்
புண்ணிய பூமி
புத்தகங்கள்...

மறை பொருளாய்
அமிழ்ந்து கிடக்கும்
அறிவுப் புதையல்களின்
வெளிச்சக் கீற்றுகள்
வெளியேறும் தலை வாசல்
எழுத்துக்கள்....


தனிமையும் தவிப்பும்
தானாகவே மறையும்
தருணங்கள் யாவும்
உறவாடிய 'சொந்தம்'
புத்தகம் தானே....

அறிவைத்
தேடிய பயணத்தில்
ஆசானாய் போதிக்கும் புத்தகங்களின்
ஆழத்தில் 'கல்வி' எனும்
அறிவூற்று கருவாகி நிற்கிறது...

போட்டிகள் நிறைந்த
புதுமை உலகில்
புத்தக அறிவில் செதுக்கிய
மந்திரக் கோலின் கையசைப்புக்கே
'சிவப்புக் கம்பளம்' விரிகிறது...

வாழ்க்கையில்
பிரதிபலிக்காத வாசிப்புகள்...
காற்றோடு கலந்து
காணாமலே போகிறது.!

புரிதலோடு புறப்படும்
புத்தக மையல்கள் தான்...
புயலாய் மாறி
புளாங்கிதம் கொள்கிறது..!

மனித வாழ்வின்
மகத்துவமான
மணித் துளிகள்
அத்தனையிலும்
மண்டிக் கிடக்கிறது...
வண்டிக் கணக்கில்
புத்தக வாசனைகள்....

பால்ய வயதிலும்
பதின்ம வயதிலும்
கணக்கும் சுமைகளாய்
புத்தகப் பொதிகளை
சுமக்கும் புத்திரர்களுக்கு...
தள்ளாத வயதிலும்
அறிவுச் சுமையால்
வாழ்க்கை மணக்கிறது....

தொட்டுத் தழுவி
கைகளில் தவழும்
நூல்களின் ஸ்பரிசங்கள்
நிலை குத்தி நிற்கிறது...
நூலாயிரம் தந்த சான்றோர்களை
நெஞ்சில் ஏந்தியவாறு....
கணினியுகத்தின்
இணைய புத்தகங்கள்
தந்திடாத மாட்சிமை தாங்கி..!

புலம் பெயர்ந்த பேய்களும்
குடியேறி வசிக்கும் 'மியூசியங்களாக'
இடம் மாறிய நூலகங்கள்...
தலைமுறையின் சாபக் கேடு.!


கரையான்கள் ருசி பார்க்கும்
புத்தக குருத்துகளில் எல்லாம்
ஒளிந்திருக்கிறது....
ஆத்மார்த்த கருத்துக்கள்.!


ஆறறிவு மனிதனின்
அறிவிழந்த அலட்சியத்தால்
சிலந்திக் கூடுகளின்
தாத்ரூப வலைப் பின்னலில்
புத்தகங்கள் பின்னப்பட்டிருக்கிறது
பகுத்தறிவு பாலமாக....


அவசர உலகில்
அறிவை சுவாசிக்க
அனுமதி கிடைத்தாலும் கூட
இன்னும் வாசிக்கப்படாத
புத்தகங்கள் எத்தனையோ..??

புலரும்
பொழுதுகள் எல்லாம்
பண்டிகை தான்...
புத்தகங்களோடு
புரளும் மனிதர்களுக்கு..!

திரும்பிய
திசைகள் எல்லாம்
திருவிழா தான்....
தலைமுறை வாழ்த்தும்
புத்தகப் புனிதர்களுக்கு...!

மகிழ்ச்சித்
தருணங்களில் எல்லாம்
பரிமாறப் படவேண்டியது...
மனம் மகிழும்
வார்த்தைகளோடு....
குணம் தவழும்
புத்தகங்களும் தான்..!

ஊதுவர்த்தி,
சாம்பிராணி வாசனைகளோடு
பூஜைப் பொருளாகும்
புத்தகங்களால் பயனேதுமில்லை
புரிதலோடு புரட்டப்படாத வரை..!

மனிதன்
கொண்டாட வேண்டியது
விழாக்களும் ,
பண்டிகைகளும் மட்டுமல்ல....
புத்தகங்களையும் தான்.


FACE BOOK COMMENTS :

Unlike ·  · Share

No comments:

Post a Comment