தேடல்

Tuesday 24 April 2012

'என் நண்பன்' போல யாரு மச்சான் ?



கவலையில்,
கரையும் கணங்களெல்லாம்..
கண்ணீரை துடைத்து விடும்
காட்டாறு - நட்பு !

மகிழ்ச்சியில்,
மிதக்கும் மணித்துளியிலும்..
மனதை பண்படுத்தும்
மாவீரன் - நண்பன் !



அன்னையின்
தாலாட்டுப் பாடல்கள்..
மெலிதாய் குறைந்து
மழலை மொழிகளில்
'நேத்து வருவேன்.. '
'நாளைக்கு வந்தேன்...' என

இலக்கணப் பிழைகளோடு
தடுமாறிய உதடுகள்..
தாய் மொழியை சரளமாய்
பேசத் துணிந்தது
பால்ய நண்பனிடம் தான் !




யார் ?
என் பாசப் பிணைப்பு...
நினைவலைகளை
பின்னோக்கி நகர்த்திய போது...
இறந்த காலத்திலும்
உயிருடன் பயணிக்கிறான் - என்னுடன்
நண்பன் !



மழையில் நனைவான்..
அவன் பிடித்திருக்கும் குடைக்குள் நான்...
துளியும் நனையாமல் !




வெயிலும் விதி விலக்கல்ல..
அவன் பிடிக்கும் குடைக்குள் நாங்கள்...
நிழலின் தொடரலில் !



சரீரம் துளைக்கும்
குளிர் நடுநிசியிலும்,
கொஞ்சமும் இல்லை.. நடுக்கம் ...
எனக்கு .?


கண் விழித்த பின் தான்
கண்டு கொண்டேன். ?
நண்பன் இட்ட கம்பளி.. என் மேல்...
அருகே நடுங்கிய படி
நண்பன்.. போர்வையின்றி...

என்
தவறுகள்
தலையெடுக்கும் தருணங்கள்..
'கன்னத்தில் அறைந்து'
உண்மையை உணர்த்தும் உரிமை
பிதா, குருவிற்கு பிறகு உனக்கல்லவா ?




நான்
புரியும் தவறுகள்,
உணர்த்தும் தோழன்..
அறியும்
உண்மைகள் பேசும்,
தர்மன்...

நண்பா !
நீ
கேட்காமலே தந்த கடன்களுக்கு,
இது வரை..
கணக்குகள் ஏதும் இல்லை -  என்னிடம்..


இன்னும்
திருப்பித் தராத தொகைகளுக்கு,
இன்று வரை...
வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லை - நம்மிடம்..


மொத்தத்தில்
என் நண்பன் வாழா பூமிப்பந்து..
அன்பைப் புதைத்த  - வெற்றிடம் !

சண்டைகளும்,
சமாதானங்களும்,
முதலாய் கற்றுத் தந்த..
பயிற்சிப் பாசறை - பாசவலை நட்பு !



பலரின்
சாதனை சரித்திரங்களின்,
பின்னணியைத் திரும்பிப் பார்த்தால்...
'ஊக்க மருந்தே' முன்னணியில் வரும்
உருவேற்றியது நண்பனல்லவா ?
ஊக்க மருந்தாக !

நண்பன்
விளையாட மட்டுமல்ல,
விதியின் விளையாட்டு முடியும் வரை !



கருவறை
சுமந்த பிண்டத்தை,
கல்லறை வரை கண்ணீருடன்..
சுமந்து வழியனுப்பும் கட்டுமரம்...
நண்பர்கள் கூட்டம் !

நண்பர்களோடு,
வீதியில் உலா வரும்
மணித்துளிகளின் கம்பீரம்...
காணாமலே போகிறது.?
தனியாய் ஊர் சுற்றும் போது !




பள்ளி
கல்லூரிக் காலங்களில்,
'முதல் முறையாக'
நண்பர்களைத் தொலைத்து - மகிழ்ச்சியை  
கண்ணீரில் தேடுகிறோம் - இன்றும் !
பிரிவதற்கு நிச்சயித்த நாள் முதலாய்
'பேர் வெல்' (FARE WELL)




நான்..
நாடி தளர்ந்து
நூறு வயதானாலும்,
'இளையவனாய்' வாழ முடியும் ...
நண்பர்களோடு நகர்ந்த,
நாழிகைகளை அசை போட்டுக் கொண்டே !

1 comment:

  1. கவிதையைப் படித்ததும் என் கல்லூரிக்காலங்கள் நினைவுக்கு வந்தன.அத்துடன் கண்ணீரும் வந்தது
    "நண்பன் இட்ட கம்பளி.. என் மேல்...
    அருகே நடுங்கிய படி
    நண்பன்.. போர்வையின்றி..."அடடா என்ன வார்த்தைகள்...உணர்ச்சிப் பிரவாகம்.
    குற்றாலத்தில் குளிரில்;நான் நடுங்கிய போது என் நண்பன் இப்படி இருந்தான்.
    உங்கள் கவிதை என்னை அப்படியே என் கண்முன் காட்டுகிறது.
    ஒவொரு வரிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    .

    ReplyDelete