தேடல்

Saturday 1 June 2013

சந்ததி வாழ 'சாதியை சாகடி'..!

ஆதியில்
ஆண் சாதி
பெண் சாதியென்று
பகுத்தாய்வு செய்யத் துவங்கிய
ஆதாமின் வாரிசுகள்...

மனித சாதியில்
மனித மிருகங்களையும்,
மிருக சாதியில்
மிருக மானிடர்களையும்,
சாதிப் பட்டியலாக்கிக் கொண்டனர்..!


ஆரிய மேதாவிகள்
வளர்த்தெடுத்த சாதீய நெருப்பு
குலத்தொழில் பிரிவுகளாகி
கொழுந்து விட்டு எரிகிறது...!

இங்கு
சாதிக் களிமண்ணில் வார்த்தெடுத்த
'தலையாட்டி பொம்மைகள்'
அத்தனையும்
காவல் தெய்வங்களாய்
காட்சி தரும்
சாதீயத் தலைகளின் கட்டளைகளை
தெய்வ வாக்காக பூசிக்கிறது...!


"இல்லங்களை தரைமட்டமாக்கு
அரசுப் பேருந்துகளை தீக்கிரையாக்கு
மரங்களை வெட்டித் தள்ளு
மாறு கால்; மாறு கை வாங்கு
அரிவாளால் வெட்டி கூறாக்கு
கற்பைச் சூறையாடு
உயிரோடு கொளுத்து"

ஐயா,
இதுவா தெய்வ வாக்கு ??

சாதியின் பெயரால்
சாகசங்கள் செய்து காட்டும்
சர்க்கஸ் வித்தைக்காரர்கள்
ஆட்டுவிக்கும் விகடகவிகளாக
அப்பாவிகளின் சாம்ராஜ்ஜியம்..!

'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று
பள்ளி கல்வி ஏடுகள் தோறும்
பாடங்களாக்கி விட்டு...
'சாதிச் சான்றிதழ்' பெறுவதை
சட்டமாக்கிய பரிகாசத்தை என்ன சொல்ல..?



சாதிக்கு சமாதி கட்ட
சொற்போர் புரிந்த வீரத் தலைவர்கள்
இப்போது
அனேகமாக அனைத்து ஊரகங்களின்
ஒதுக்குப் புறங்களிலும்
அண்ணா நகராகவும்
அம்பேத்கார் நகராகவும்
பெரியார் நகராகவும்
பாரதி நகராகவும் 'தன்னந்தனியாக'
சமாதி ஆக்கப்பட்டுள்ளனர்...
'சமத்துவபுரங்கள்' எனும்
சாதியின் அழியாச் சின்னங்களாக...!

சாதிக்கு இலக்கணம்
சொல்லும் சாணக்கியர்கள்
மனித நேயம் கொன்று
விளைந்த சாதி வெறியில்
என்ன சாதனையை இன்னும்
தேடிக் கொண்டிருக்கிறார்கள்..?


சாதியெனும்
சாக்கடைக்குள் நாறிக் கிடக்கும்
சத்தியவான்கள் பேசித் திரியும்
சமத்துவங்கள் 'சாதி'த்தது என்ன...?

சாதிப் பேய் தலைக்கேறிய
சதிகார அதிகாரமே...
சாதீ நெருப்புக்கு தூபம் போட்டு
குளிர் காயும் குள்ள நரி கூட்டமே....

கணக்கற்ற சாதிகளால்
கனக்கும் தேசத்தில்
பிணங்களின் அறுவடை தான்
வசந்த காலமா..??

சரீரத்தில் ஓடும்
உதிரம் என்ன சாதி..?
சாதி வன்முறையால் உதிரும்
உயிர்களுக்கு என்ன நீதி...?

சாமானியர்களை
சண்டாளர்களாக சித்தரிக்கும்
மனு நீதிகள் மூச்சிழக்கும் வரை
சாதிச் சனியன்கள்
சாகப் போவதில்லை...!?

இங்கு
சாதி விதை தூவியவர்கள் மனதில்
சாந்தி இல்லாமல் சமாதியாகிறார்கள்...
சாதியினை விதைத்த மனிதன் - தன்
சிந்தனையை விதைக்கத் தான்
மறந்தே போனான்...!?


நீயும்,
நானும்
சகாக்களானால் சாதிகளேது...?
சிந்தித்துப் பார்
சீக்கிரம் விதை - உன்
சிந்தனை விதைகளை....

அறிவு நீர் ஊற்று
முளை விடும் நாட்டுப் பற்று...
சகோதரத்துவத்தை உரமாய் ஊட்டு
மனிதம் மரமாய் எழும்..!

சாதிகளை பார்த்தால் அழித்து ஒழி..
சாதியை கேட்டால் சவுக்கால் அடி...
சந்ததி வாழ 'சாதியை சாகடி'..!

FACE BOOK COMMENTS :

Unlike ·  · Share

No comments:

Post a Comment