தேடல்

Tuesday 6 March 2012

பாசமுள்ள பவர் கட்




இத்தனை நாளும்
அவசர சிகிச்சைப் பிரிவில்,
அனுமதிக்கப்பட்டிருந்த 'மின்சார ராசா'
இப்போது..
பொது சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம் !



பத்து மணி நேர
பவர் கட் நான்காக குறைப்பு !
இனி
மொத்தமும் குறையுமாம்.?
படிப்படியாக..

இன்னும்
எத்தனை படிகள் ?
என்பது மட்டும்
புரியாத புதிராக...

அறுபதுகளில்
அதிரடியாய் படையெடுத்து,
ஆட்சியைப் பிடித்த
ஐரோப்பாவின் 'மின்சார இளவரசன்'
படுக்கையில் கிடக்க
கிளர்ச்சியின் வேர்கள் அசுர வளர்ச்சியில்...




அரிக்கேன் சமஸ்தானம்..
சிமிழி குறு நில ராசா...
மெழுகுப் போராளி..
தீப்பந்த சாம்ராஜ்யம்...
இன்னும் எத்தனையோ..!




ஐம்பது
வருடங்களுக்குப் பிறகு,
இப்பொழுது தான்
பொழுது சாய்ந்ததன் - கரிய
இருள் புலப்படுகிறது - கண்களுக்கு
மாலை நேர மின் வெட்டால் !




காக்கைகள்
கூட்டமாய் கரைந்து சென்று,
கூடுகளை அடையும் பொழுதுகள்..
நிதர்சனமாய் நிசப்தம் கலைக்கிறது...

இயற்கை காற்று தாலாட்டும்
இருள் சூழ்ந்த கட்டாந்தரை,
இராப்பொழுதுகள்..
இளமை கால தூரிகைகளாக,
இடம் பெயர்கிறது !
இறந்த காலத்தை நோக்கி...





எசமானி
அம்மாவின் தனிக் கவனிப்பில்,
ஈசானி மூலையில் தூசு படிந்து கிடந்த
அம்மிக் கல்லும், ஆட்டுரல் கல்லும்
அடுப்பங்கரையில் அரைக்கும் சத்தம்..

எங்கோ
கேட்டதாய் ஓர் ஞாபகம் !?




அரிக்கேன் விளக்கின்
மண்ணெண்ணெய் வாசனைகள்,
சுவாசத்தில் கரைந்தது காற்றோடு...

எப்போதோ
நுகர்ந்ததாய் ஒரு புரிதல் !?




சில்லென்று
உமிப்புகை போட்ட மண்பானைத் தண்ணீர்..

எங்கேயோ
தாகம் தீர்த்ததாய் ஓர் நினைவு !?

மாதா கோயிலிலும்,
கண்ணீர் அஞ்சலியிலும்,
காணக் கிடைத்த மெழுகுவர்த்திகள்..
இன்று சக்கரவர்த்திகளாக,
இல்லங்கள் தோறும்..!




மின்சாரம்
தடைபடும் நடு நிசியிலும்
சம்சாரமும், குழந்தைகளுமாக,
காற்றைத் தேடிய பயணம்..
கடைசியில் முடிகிறது - குட்டிக் கதைகளோடு

மொட்டை மாடியில்...



வட்ட நிலவும், நட்சத்திரப் போர்வையும்
நிசப்தமான காற்றும் கலந்து...

தொடர் மின்வெட்டால்
தொலைக் காட்சித் தொடர்களின்,
தொடர்ச்சிகள் தொலைக்கப்பட்டது.?

குடும்ப உறவுகளின்
நட்புரையாடல் நாழிகைகள்,
நயமோடு துவங்கப்பட்டது.!




நட்பின்
நாழிகைகள் குறைகிறது - இப்போது..??
மின் வெட்டு குறையக் குறைய ...

மின் வெட்டால்
அமைதிப் பூங்காவான வீடுகள்..
டி.வி ரிமோட்டுக்கான சண்டைகளின்
யுத்தக் களங்களாக மீண்டும் மாறுமோ.?




மின் கட்டண உயர்வை
எதிர் கொள்ள எத்தனிக்கும் வேலையில்,
பாதியாய் குறைந்த மின் கட்டணம்.?
தொடர் மின் வெட்டால்.!

மின் வெட்டால்
இயந்திர வாழ்கையின்
இயக்கங்கள் தடைபட்டு,
இயற்கையின் வாசல்கள் திறக்கப்பட்டது.!

இன்னும்
இயற்கையை சுவாசிக்க மனமில்லை..
மின்சார அடிமைகளுக்கு.?




மின்வெட்டே
நீ என்னைப் பிரிந்தாலும்,
உனக்கு
அஞ்சலி செலுத்தவாவது - சில நிமிடம் 
மின் விளக்கையும்,
விசிறியையும் அணைத்து..
என்னுடன் இருப்பதாய் கனாக் காண்பேன்
பிரிய மனமில்லாமல்...